வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது.
தொழில்நுட்பமானது நாள்தோறும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்கள் முகம் பார்த்து பேசும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. முகம் பார்த்து பேசுவதை விட செல்போனில் பேசி மகிழ்வது அதிகம் விரும்பி வருகின்றனர். தொலைவில் இருக்கும் உறவினர்களுக்கு முன்பெல்லாம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பேசுவோம். அதனுடைய மதிப்பு உயர்ந்து இருந்தது. தற்போது தொலைதொடர்பு சாதனங்கள் சீரிய வளர்ச்சி அடைந்து எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால் உறவின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முன்பு காலத்தில் தாத்தா பாட்டியுடன் நேரம் செலவழித்து அதிக கதைகள் கேட்டு வருவர்.
ஆனால் தற்போது செல்போன் மயமான இந்த உலகத்தில் அதைப் பயன்படுத்துவதற்கு நேரம் சரியாகி விட்ட நிலையில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனிப்பதே இல்லை என்று ஆய்வு ஒன்றில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால் இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில்,
வருகின்ற நவம்பர் 14 குழந்தைகள் தினம் அன்று பெற்றோர்கள் இரவு 7.30மணி முதல் 8.30 மணி வரை செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்து அறிவுரை கூறி அவர்களுடைய திறமைகளை என்ன அவர்களது ஆசைகள் என்னென்ன ஆகியவற்றை கேட்டறிந்தால் அது அவர்களை ஊக்கப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களுக்கு இந்த அறிவுரையை கண்டிப்பாக கூறி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.