தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் தற்போது தொடர்ந்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தமிழகம் இன்னும் கொரோனா பிடியிலிருந்து வெளிவராத நிலையில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கினால் கொரோனா பரவல் அதிகரிக்கும். இதனால் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுவதற்கு மிக குறைவான வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து கொரோனா முதல் அலையின் போது மாஸ்டர் பட வெளியீட்டின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த ,எனிமி மற்றும் வா டீல் போன்ற படங்கள் வெளியிடப்பட உள்ளது. இது கொரோனா பரவலுக்கு காரணமாக அமையும் என்பதால் திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் இயங்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் வருகின்ற நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திரையரங்குகள் மூட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளது.