சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமானது மொபிலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்துடன் (TFL) சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கைகோர்த்து இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகிற 2041-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பயணிகளை நடைபயணமாக மற்றும் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தும் விதமாக திட்டங்களானது செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிக்கும் ஒரே விதமான டிக்கெட் மட்டுமே பயன்படுத்தும் முறையையும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்திடமிருந்து உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பெற்று அதற்கு தகுந்தார் போன்று பொது போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது.
இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கூறியதாவது, லண்டன் போக்குவரத்து கழகத்தின் அனுபவத்திலிருந்து எப்படி சர்வே எடுப்பது போன்ற முறைகளை தெரிந்து கொள்ள இருக்கிறோம். மேலும் பொது டிக்கெட் வசதியை அமல்படுத்துவதற்கும் உரிய ஆலோசனைகளை பெற இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.