வரதட்சணை கொடுமையால் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் காலனி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் பேராசிரியராக ஆப்பிரிக்க நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரியும் செந்தமிழ்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 30 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதிகளுக்கு ஹரிணி என்ற குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ராகுல் ராஜன் தனது குடும்பத்துடன் குண்டியமல்லூர் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு போது, ராகுல் ராஜன் தமிழ்செல்வி வாங்கும் சம்பளத்தை தன்னுடைய தாயாரிடம் கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார். மேலும் ஹரிணியின் காதணி விழா நடைபெறும் போது, அவருடைய கணவர் ராகுல் மற்றும் மாமியார் மாரியம்மாள் சீர்வரிசை பொருட்கள் அதிகமாக கொண்டுவரவில்லை என்று கூறி தமிழ்ச்செல்வியின் பெற்றோரிடம் சண்டை போட்டு அவர்களை விழாவிலிருந்து அனுப்பி விட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ராகுல் ராஜனும், அவரது தாயாரும் ராஜனின் தம்பி திருமணத்திற்காக தமிழ்செல்வியிடம் பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த தமிழ்செல்வி 2019ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குறிஞ்சிப்பாடி போலீசார் ராகுல் ராஜன், மாரியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து விட்டனர். இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் நீதிமன்றம் நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளிகளான ராகுல் ராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், மாரியம்மாளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.