தர்மபுரியை சேர்ந்த தம்பதிகள் பிரசாத்- விசயலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும், மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு சளித் தொல்லை அதிகம் இருந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை அங்கன்வாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த செவிலியரிடம் குழந்தையை காண்பித்த போது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டீர்களா? என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்று கூறவே, அந்த செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு உள்ளார்.
மேலும் குழந்தைக்கு சளி மருந்தையும் கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த நிலையில் பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்ததால் சளிக்குரிய மருந்தை கொடுத்து குழந்தையை தூங்க வைத்துள்ளார். பின்னர் மாலை நேரத்தில் எழுப்பியபோது குழந்தை அசைவற்று இருந்ததால் பதறிப்போன விஜயலட்சுமி குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்து மற்றும் சளி மருந்தை ஆய்வு செய்து வருகின்றனர்.