கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 என்னும் முக கவசம் இல்லாமல் பணியினை செய்ய வேண்டிய பரிதாப நிலையும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலிபோர்னியாவில் இருக்கும் சான்டா மோனிகாவில் உள்ள செயின்ட் ஜான் சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உடன் பணியாற்றிய மற்ற நர்சுகளும் பயந்து N95 இல்லாமல் வேலை செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர்.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் N95 மாஸ்க் தேவை இல்லை என கூறியதை தொடர்ந்து செவிலியர்கள் வேலைக்கு செல்ல மறுத்துள்ளனர். இதனால் தேசிய செவிலியர்கள் சங்கம் பணிக்கு செல்ல மறுத்த நர்சுகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நர்ஸ் கூறுகையில் “மருத்துவமனை மேனேஜர்கள் கூறும் வழிமுறைகளையே நாங்கள் பின்பற்றுகிறோம் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மாஸ்க் பயன்படுத்தினால் போதும் என அவர்கள் கூறினார்கள்” என்றார்.