பேரிச்சம்பழம் பாக்கெட்டுக்குள் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அந்த பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி மறைத்துக்கொண்டு வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சினிமாவையும் மிஞ்சிய இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.