நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது .இதில் ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்னுடனும் , நீல் வாக்னர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனிடையே 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீல் வாக்னர் 49 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து அசத்தினார்.தொடர்ந்து விளையாடிய அவர் 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய டாம் பிளண்டல் 96 ரன்னும், கொலின் டி கிராண்ட்ஹோம் 45 ரன்னும், மேட் ஹென்ரி 58 ரன்னும் எடுக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் குவித்தது .
தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஆலிவர் 3 விக்கெட், ரபடா, மார்கிராம், ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதனால் 387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் 2-வது இன்னிங்சிலும் அந்த அணி மளமளவென விக்கெட் இழந்து தடுமாறியது. இறுதியாக தென்ஆப்பிரிக்கா அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா அணி 353 ரன்கள் பின்தங்கியுள்ளது.