சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் என்பவர் இருக்கிறார். இவர் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றார். இதேபோன்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு விதமான நலத்திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்துகிறார். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கௌரி கௌரா பூஜையானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த பூஜையின் போது சவுக்கால் அடிக்கப்படும் ஒரு சடங்கானது கடைபிடிக்கப்படும். இந்த சவுக்கு குஷ் எனப்படும் புற்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சவுக்கை வைத்து அடித்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேஷ் பாகல் கலந்து கொண்டார். அப்போது முதல்வரை ஒருவர் வலது கையில் சவுக்கால் அடித்தார். இந்த அடியை முதல்வர் மிகவும் பொறுமையாக வாங்கிக் கொண்டார். மேலும் பொது மக்களால் காலம் காலமாக பின்பற்றப்படும் சடங்கில் முதல்வரும் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.