தனது நண்பர் ஒபாமாவும் தன்னுடன் இணைந்து நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார்
இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜோ பிடன் இதுகுறித்து கவலை இன்றி காணொளி மூலம் பரப்புரை நிதி திரட்டும் நிகழ்ச்சி என தொடர்ந்து பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் தனக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “அடுத்த வாரம் எனது நண்பரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான பராக் ஒபாமாவுடன் இணைந்து காணொளி மூலம் நடைபெறும் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அங்கு உங்கள் அனைவரையும் காண்பதற்கு ஆர்வமாக இருக்கின்றேன்” என பதிவு செய்திருந்தார்.
இதுவரை தேர்தல் பரப்புரைக்கு 80.8 மில்லியன் டாலர்களை திரட்டி இருப்பதாக ஜோ பிடன் தெரிவித்திருந்தார். அதோடு இணையவழி நன்கொடையாக 30 டாலர்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் ஆதரவாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். நிதி திரட்டும் நிகழ்ச்சி குறித்து முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா அனுப்பிய மின்னஞ்சலில், “நமது வாழ்நாளில் மிக முக்கிய தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கின்றது.
நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலின் மூலமாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அனைவருக்கும் சுகாதார காப்பீடு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார். ஒபாமா அமல்படுத்திய காப்பீட்டு திட்டம் சரியில்லை என்று அதிபர் ட்ரம்ப் ரத்து செய்ததால், கொரோனா பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முறையான சிகிச்சை பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.