நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதுவது மிகவும் கட்டாயம். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேரமுடியும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஓபிசி எனப்படும் இதர வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பூபேந்திர யாதவ், எம்.பி.க்களான கணேஷ் சிங், சுரேந்திர சிங் நாகர் மற்றும் மத்திய இணை அமைச்சருமான அனுப்ரியா படேல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்கள். இதையடுத்து ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், எம் டி, எம்எஸ், எம்டிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.