மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் அமைப்பு ரீதியாகவோ எந்தவித தடையும் கிடையாது. ஆனால் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீடு தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து புதிய சட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும்.
மேலும் அடுத்த மூன்று மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மேல்முறையீட்டு மனு ஒன்று கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.