ஓபிஎஸ் கம்பம் தொகுதியில் தன்னுடைய இளைய மகனை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதையடுத்து ஓபிஎஸ் தன்னுடைய மூத்த மகனை டெல்லி அரசியலில் இறக்கி விட்டு, இளைய மகனை தனக்குத் துணையாக சட்டமன்றத்தில் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அதுவும் செல்வாக்குமிக்க தொகுதியில் இறக்க உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தை சுற்றி அரசியல் பேச்சுக்கள் பலமாக உள்ளன.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க எதிர்த்த நிலையில் அமைச்சர்கள் பேசி சரிக்கட்டி அவர் வாயாலேயே எடப்பாடியை வேட்பாளராக அறிவிக்க வைத்தனர். ஆனால் அதன்பின் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அவர் வெளிப்படையாகப் பேசவில்லை. இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்று சந்தேகம் வரும் அளவிற்கு நாளிதழ்களில் தொடர்ந்து தன்னை முன்னிறுத்தி சொந்த செலவில் வெளியிட்டு வருகிறார் ஓபிஎஸ். இது ஒரு பக்கமிருக்க ஓபிஎஸ் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரையும் வைத்து கட்சி நடத்த வாரிசுகளை களமிறக்கி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய மகன் ஜெயபிரதீப்பை கம்பம் தொகுதியில் களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொகுதிக்குள் தான் பன்னீர்செல்வத்தின் மாமனார் ஊர், ஜெயபிரதீப் மாமனார் ஊர் ஆகியவை இருக்கின்றன. மேலும் பன்னீர்செல்வத்தின் சமூகத்தை சேர்ந்தவர்கள் கம்பம் பகுதியில் அதிகளவில் உள்ளனர். இதோடு சேர்த்து தேனி வாக்காளர்களுக்கு எதிரொலிக்கும் விதமாக சிறப்பான கவனிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.