தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிக மழையை தந்து செழிப்பை உருவாக்குவது வடகிழக்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை மழை தொடரும். ஆனால் கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆனாலும் இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை கிடைத்து.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியது, வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கின் காரணமாக வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசக்கூடும்.இதனால் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதியில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் 26ஆம் தேதி முதல் தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையின் இயல்பு அளவு 449.7 மி.மீ. வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி உள்ளது என்று கணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து புதுவை மற்றும் காரைக்கால் போன்ற ஏனைய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.