அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்த கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு வரும் அக்டோபர் 5 ஆம் நாள் திறக்கப்படும் எனவும் அதேபோல் 9 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 12 ஆம் நாள் பள்ளிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இவர்களுக்கான போக்குவரத்து வசதி மதிய உணவு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களின் கையொப்பம் உறுதி பெற்ற பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.