புதுவையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் போட்டவுடன் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் பணம் கொடுக்க முடியாது. ஓசியில் தான் போடவேண்டும். எங்களிடம் பணம் கேட்டால் பெட்ரோல் பங்கை கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.
இதுபற்றி பெட்ரோல் பங்க் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது மிரட்டல் விடுத்துவிட்டு தப்பித்து ஓடியவர்களை விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடியை சேர்ந்த விஜயசாரதி வேடியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவையில் அண்மைகாலமாக சட்ட ஒழுங்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் கொலை கொள்ளை சம்பவங்களை காட்டிலும் வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், புதுவையில் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்றும், குற்றவாளிகளை பிடிப்பதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போதும், புதுவையில் ரவுடிகளை பிடிக்கச் செல்லும் போதும், காவல்துறையினர் தங்களது துப்பாக்கி எடுத்து செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார்.