ஓடும் காரில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் பாபுலால் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இவர்களுடைய மகனுக்கும் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தூத்துக்குடியில் இருந்த புதுமண தம்பதியை அழைத்துச் செல்வதற்காக இருவரும் காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை அவரது உறவினர் முகம்மத்தஸ்வின் அயாஸ் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகம்மத்தஸ்வின் அயாஸ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். அதன்பின் பாபுலால் பாய் உள்பட 3 பேரும் காரில் இருந்து இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பாபுலால் பாய் உள்ளிட்ட 3 பேரும் வேறொரு காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.