ஓடும் பேருந்தில் 33 1\2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டிவலசு பகுதியில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் சொந்தமாக துணி கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் முகமது ஆரிப் கோவையில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டுள்ளார். இதனால் முகமது ஆரிப் ஈரோட்டிலிருந்து கோவை அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேலும் முகமது ஆரிப் திருமணத்திற்காக 33 1\2 பவுன் நகை மற்றும் துணிகள் இருந்த பையை தன் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் வைத்திருந்தார். இந்நிலையில் முகமது ஆரிப் திருப்பூர் அருகில் வந்து கொண்டிருந்தபோது நகை வைத்திருந்த பையை பார்த்தார்.
ஆனால் அந்த இடத்தில் இருந்த பை காணாமல் போனது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது ஆரிப் உடனடியாக கத்தி கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தும் படி கூறினார். இதனையடுத்து பேருந்து நின்ற உடன் தனது பையை முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால் நீண்ட நேரம் தேடியும் பை கிடைக்கவில்லை. இது குறித்து முகமது ஆரிப் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் புதிய திருப்பூருக்கு முன்னதாக உள்ள நிறுத்தங்களில் யாராவது பையுடன் இறங்கினார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.