ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். அவர் கோவையிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பயணித்தார். இந்நிலையில் முனிராஜ் பேருந்தில் ஏறும் போது புகையிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்-அவினாசிபாளையம் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது முன் வாசல் கதவை திறந்து எச்சில் துப்ப முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக ஓடும் பேருந்தில் இருந்து முனிராஜ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த முனிராஜை மற்ற பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரைவர் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.