மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 11 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் இருவர், புல்தானாவில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நோய் தொற்று காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.