தமிழக விவசாயிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகைகளை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அறிவித்துள்ளது.
பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாகவும், காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழக விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 1,821 ஆக உள்ள நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அளித்துள்ள சலுகைகளுக்கான கால அவகாசத்தை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.