நெஞ்சு வலி அதிகமானதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் விபத்துக்குள்ளாகி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வள்ளி வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய தொல்லியல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ், ரகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வள்ளி வேலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரது மனைவி விஜயகுமாரியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனையடுத்து கார் ஓட்டி கொண்டிருக்கும் போதே வள்ளி வேலனுக்கு நெஞ்சு வலி அதிகமாகி உள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விட்டதால் கணவன் மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வள்ளி வேலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.