ஆதிவாசி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிரன்ராக் ஆதிவாசி காலனி பகுதியில் 15 ஆதிவாசி குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு பந்தலூருக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஆதிவாசி மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வருவாய் துறையினருக்கு ஆதிவாசி காலனியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் படி கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், வருவாய்த் துறையினர் மற்றும் சில அதிகாரிகள் அந்த காலனிப் பகுதிக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உள்ளனர்.