தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் கலந்து விடுகிறது. இதனால் இந்த தாமரை குளம் தற்போது சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தாமரை குளத்தில் இருந்த மீன்கள் திடீரென தண்ணீரில் செத்து மிதந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செத்துக் கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் குளத்தில் கிடந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். அதன் பின் ரசாயன கழிவுகள் குளத்து நீரில் கலந்ததால் மீன்கள் இறந்து விட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.