ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூர் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில் 1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது அந்த வாகனத்தில் வந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனியார் வங்கி ஏ.டி.எம்-களில் நிரப்புவதற்காக பணம் எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் சென்னை மெட்ரோ ரயில் தனி தாசில்தார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கட்ராமன் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி சுப்பிரமணியனிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் பிறகு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.