விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது பாசனப் பகுதியில் உள்ள பிரச்னைகளை அலுவலர்களிடம் தெரிவித்து வந்தனர். அப்போது பேசிய விவசாயி ஒருவர், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பகுதிக்கு முறையாக வருவது இல்லை என்றும் விஏஓ என்றால் ‘வெட்டி ஆபிசர்’ என்றும் பேசினார்.
இதனை கேட்டு கொண்டிருந்த அலுவலர்கள் கொந்தளித்து விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் மீது புகார் இருந்தால் அதனையும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் அதனை விட்டு விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று தரக்குறைவாக பேச வேண்டாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு, விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் இருப்பதே இல்லை என்றும் இதனால் விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று கூறியதில் தவறு இல்லை என்றும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.