ஐபிஎல் போட்டியை வெளிமாநிலங்களில் நடத்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 13வது சீசனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா , அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன்பின் ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த இருக்கும் கடிதத்தை அனுப்பியதால் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு வேண்டிய வேலைகளில் ஐக்கிய அரபு அமீரகம் இறங்கியுள்ளது. இதனிடையே போட்டியை நடத்த மத்திய அரசிடம் ஏற்கனவே பிசிசிஐ அனுமதி கேட்டிருந்தது. தற்போது முறையான அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பிரிஜேஷ் படெல் கூறும்பொழுது, ” மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் இவர்களிடமிருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியை தற்போது பிசிசிஐ பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வாய்மொழி மூலம் மத்திய அரசு சரி என்று சொல்லியிருந்தது. ஆனால் இப்பொழுது நாங்கள் பேப்பரில் எழுத்துப்பூர்வமாக உள்ள அனுமதியை வாங்கியுள்ளோம். ஆகவே ஐபிஎல் அணிகள் எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி 24 மணி நேரத்திற்குள் இரண்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகுதான் துபாய் புறப்படுகிறது. அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் 22ஆம் தேதி புறப்படும் ” என அவர் தெரிவித்துள்ளார்.