சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்ட்டப்பேரவை நடைபெற வேண்டுமா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சட்டப்பேரவை நடைபெற வேண்டுமா என கேள்வியை முன்வைத்தார்.
இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடத்த சபாநாயகர் தனபால் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து பிற்பகல் 1 மணிக்கு முடிவு செய்யப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் தொடர்ந்து சட்டப்பேரவையை நடத்தலாமா? அலலது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்.