பிரிட்டன் நாட்டில் இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்திக்கான கட்டணம் அதிகரிக்கும் என்று வெளியான அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு முற்றிலுமாக ரஷ்ய நாட்டையே நம்பியிருந்தன. இதன் காரணமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டிற்கு கொடுத்து வந்த எரிவாயு அளவை ரஷ்யா பல மடங்காக குறைத்துக் கொண்டது. இது மட்டுமல்லாமல் நெதர்லாந்து, டென்மார்க் போன்ற பல நாடுகளுக்கு வழங்கும் எரிவாயுவை நிறுத்திக் கொண்டது. தங்கள் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்பவர்களுக்கு தான் எரிவாய் வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தது.
பிரிட்டன் நாட்டில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை எரிசக்திக்கான விலை வரம்பை மதிப்பாய்வு செய்து கட்டணத்தை வசூலித்தனர். இந்நிலையில், இனிமேல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக 24 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் இந்த பிரச்சனை குறித்து அரசுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாகவும் Ofgem நிறுவனத்தின் ஒரு முதன்மை அதிகாரி கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இதற்காக மக்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.