தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் உயர்கல்வியை தொடராமல் இருக்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பினை தமிழக அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதாவது அனைத்து அரசு மற்றும் கலை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தற்போது நவம்பர் 18-ம் தேதி வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது உயர்கல்வியில் சேராத 777 மாணவர்களையும் மீண்டும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான உதவி மையங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நவம்பர் 15-ம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் உதவி மையத்தில் கல்லூரியில் சேராத மாணவர்கள் கலந்து கொள்வதற்கு தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு உதவி மையத்திற்கு வரும் மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் படிப்பை கேட்டறிந்து அவர்கள் விரும்பும் கல்லூரியில் சீட் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் சீட் கிடைத்தால் அவர்கள் தங்களுடைய சொந்த நிதியை பயன்படுத்தி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடரலாம். ஒருவேளை விரும்பிய பாடம் கிடைக்காவிட்டாலும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி கிடைத்த பாடத்தை தேர்வு செய்து படிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த இரண்டு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உயர்கல்வியில் சேராத மாணவர்களை மீண்டும் உயர்கல்வியில் சேர்க்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.