தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கிறேன். என்னுடைய நிலைமை மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கழக நிர்வாகிகளோ, அமைச்சர்களோ என்னை துன்பபபடுத்துவது போல் நடந்து கொண்டால் நான் என்ன செய்வது. நான் யாரிடம் போய் சொல்வது. நான் நாள் தோறும் கண் விழிக்கும் போதெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள் எவ்வித புது பிரச்சனையையும் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் கண் விழிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்னை தூங்க விடாமல் செய்து விடுகிறது. உங்களின் பேச்சுக்கள் கழகத்துக்கு நன்மை சேர்ப்பது போல் இருக்க வேண்டுமே தவிர தீமை விளைவிப்பது போல் இருக்கக் கூடாது என்று பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அமைச்சர்களின் பேச்சால் தூக்கம் இன்றி தவிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னது குடும்ப உறுப்பினர்களை உரிமையோடு சுட்டிக்காட்டியது போன்றதாகும். முதல்வர் ஸ்டாலின் மிகவும் கட்டுப்பாடான தலைவர் ஆவார். ஜனநாயகத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை கொண்டவர். மேலுமம் அனைத்து அமைச்சர்களுமே முதல்வர் ஸ்டாலின் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.