பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பிரபலமான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் வாடகை தாய்முறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரியங்கா தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார்.
3 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ள பிரியங்கா, மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் மும்பை என் அன்பே என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது பிரியங்கா ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக வந்துள்ளார். ஜீ லே ஹாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் போன்றவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.