ஒகேனக்கல்லில் 4000 கனஅடி வீதம் நீர் வரத்து குறைந்ததால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் பொதுமக்கள் குவித்த வண்ணம் இருப்பர். எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் காணப்படும் ஒகேனக்கலில் தற்பொழுது 4 ஆயிரம் கன அடி வீதம் நீர் வரத்து குறைந்துள்ளதால் குளிக்க தடை இருக்காது என்பதற்காக பொதுமக்கள் கூட்டம் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்திலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து தடையை மீறி ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்டு, உற்றார் உறவினர் நண்பர்களுடன் வார விடுமுறையை சிறப்பாக கழித்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் நன்றாக ஓடியதால் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிக கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக ஊர்காவல்படை காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமான காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.