இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இரண்டு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த தலைசிறந்த வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் தனது காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதில்
“நான் அணிக்கு வந்த பொழுதும் சரி நீ அணிக்கு வந்த பொழுதும் சரி நமது மூத்த வீரர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர். களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஊடகங்களிடம் எவ்வாறு பேச வேண்டும் எனவும் பல விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம். இந்திய அணிக்காக விளையாடிய பின்னர் நமது இமேஜின் மீது அதிக அளவில் கவனமாக இருக்க வேண்டும். அப்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் இல்லாததால் எந்த ஒரு கவனச் சிதறல்களும் இல்லை.
ஆனால் தற்போதுள்ள இந்திய அணியின் நிலை அவ்வாறு இல்லை. சமூக வலைத்தளங்களினால், இந்திய வீரர்கள் தங்கள் இமேஜ் பற்றி கவலை ஏதும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எந்தக் கருத்துக்களையும் கூறலாம் எனும் நிலையை உருவாக்கியுள்ளனர். பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் தனியார் நிகழ்ச்சியில் மரியாதைக் குறைவாக பேசியது போன்ற நிகழ்வு நாம் விளையாடிய காலத்தில் நடந்ததில்லை.
அவர்கள் அதற்கு காரணம் இல்லை ஐபிஎல் மூலமாக கிடைக்கப்பெறும் பணத்தை எப்படி செலவு செய்யவேண்டும் என தெரியாமல் செலவழித்து வருகின்றனர்” எனக் கூறினார்.