நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் பிரேமா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடைக்கு சென்று கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து செல்லக் கூடாது என மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மூதாட்டியின் 18 பவுன் தங்க நகையை கழற்றுமாறு கூறி அதனை தாளில் மடித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து அந்த தாளை பிரித்து பார்த்த போது அதில் நகைகளுக்கு பதில் கல் இருந்ததை கண்டு பிரேமா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிரேமா உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.