மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.