பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த தென்காசி நெல்லை பேருந்தை வழிமறித்து அந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் எஸ்.எப்.எஸ் பேருந்துகள் எதற்காக கீழ கரும்புளியூத்து கிராமத்தில் நிற்காமல் செல்கின்றது என வினவியுள்ளார். மேலும் அனைத்துப் பேருந்துகளும் கொரோனா ஊரடங்கு முன்பாகவே எங்களது கிராமத்தில் நின்று விட்டு தான் செல்லும் எனக்கூறி அங்கிருந்து நகராமல் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேருந்தை டிரைவர் இயக்க முயற்சிக்கும்போது காளிமுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி அருகிலுள்ள கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அங்கு இருந்த கம்பியின் மீது ஏறி நகராமல் நின்று விட்டார். இதனையடுத்து சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர், காளிமுத்து பேருந்திலிருந்து இறங்காததால் மீண்டும் பேருந்தை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த கண்டக்டர் மற்றும் ஓட்டுநர் காளிமுத்துவை கண்டித்து பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்ட பின்பு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இவரை பேருந்தின் மீது கல் வீசிய வழக்கில் ஆலங்குளம் போலீசார் ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பேருந்தை வழிமறித்து காளிமுத்து ஓட்டுனரிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.