அமெரிக்காவில் ரேபிஸ் நோய் பாதிப்பு கொண்ட வௌவால் கடித்ததில் முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வௌவால் கடித்து பலியான இந்த முதியவர் வாழ்ந்த மாகாணத்தில், கடந்த 1954-ஆம் வருடத்திற்குப் பின் முதல் தடவையாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இல்லினாய்ஸ் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கூறியதாவது, 80 வயதை தாண்டிய இந்த புதியவர், அவரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
திடீரென்று, அவர் கண் விழித்து பார்த்தபோது அவரின் கழுத்துப்பகுதியில் ஒரு வௌவால் கடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வௌவாலை மீட்டு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அந்த புதியவர் ரேபிஸ் நோய்க்குரிய சிகிச்சையை அளிக்க மறுத்து விட்டாராம்.
அவரது வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, அவரின் வீட்டில் ஒரு பெரிய வௌவால் கூட்டமே இருந்திருக்கிறது. அவருக்கு வௌவால் கடித்தவுடன் முதலில் கழுத்து வலி, தலைவலி ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு, உணர்வற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இறுதியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த முதியவரோடு தொடர்பில் இருந்த நபர்களுக்கு, ரேபிஸ் குறித்த அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.