நகையை திருப்பி கேட்ட முதியவரை வியாபாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் சில்லி சிக்கன் கடை வைத்து வியாபாரம் நடத்தும் நாகப்பன் என்பவர் ஒரு பவுன் தங்க நகையை இரவல் வாங்கி சென்றுள்ளார். அதன்பிறகு வாங்கிய நகையை திருப்பி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நாகப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.