மாங்காய் பறித்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மம்சாபுரம் பகுதியில் ராமர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சில மர்ம நபர்கள் மாங்காய்களை பறித்துள்ளனர். இதனை பார்த்த ராமர் மாங்காய்களை பறிக்கக் கூடாது என்று அவர்களை தடுத்ததால் கோபம் அடைந்த அவர்கள் ராமரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னராஜ் என்பவரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காயமடைந்த ராமர் மற்றும் சின்னராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வசிக்கும் பிரபு, பாலமுருகன், சரவணன் ஆகிய மூன்று வாலிபர்களும் இணைந்து ராமரை தாக்கியது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.