சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு, தாமோதரன் அப்படிதான் செய்வேன் என்று கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளார். மேலும், இதேபோல் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலர் குறித்து தவறாக தகவலை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பியுள்ளார்.
இதனால் நேரு நகர் நலசங்கம் சார்பில் சுமார் 25பேர் தாமோதரன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் தாமோதரனை கைது செய்தனர். தாமோதரன், ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
பின்னர், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கெனவே திருமங்கலம் காவல் நிலையத்திலும் இதேபோன்று புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.