10 கோடி ஆண்டு பழமையான கல்மரம் ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நகரிமேட்டிலுள்ள ஒரு பகுதியில் கூழாங்கல் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்த பகுதியினை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான பாண்டியன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உடைய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்மரம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இனியனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கல்மரமானது 10 கோடி ஆண்டுகள் பழமையான கிரேடேசியஸ் காலத்தை சேர்ந்தது என்று பாண்டியன் கூறியுள்ளார். அதாவது இவை பூக்கும் தாவரங்களான ஆஞ்ஜியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பேர்ம் வகையை சேர்ந்தது. மேலும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கல்மரமானது 2016-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.