ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 125 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இன்று தொடங்க உள்ளது . இந்த போட்டியில் அமெரிக்கா இந்தியா ,ஜப்பான் ,பிரான்ஸ் உட்பட 204 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 33 விளையாட்டுப் போட்டிகளில் 339 தங்கப்பதக்கத்துக்காக வீரர் ,வீராங்கனைகள் மோதுகின்றனர். இந்த போட்டியின் தொடக்க விழா ரசிகர்களின் ஆரவாரத்தோடு மைதானமே அதிரும்படி நடைபெறும்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடக்கவிழாவில் ஜப்பான் மன்னர் நருஹிட்டோ உட்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். போட்டியின் தொடக்கவிழாவில் 204 நாடுகளை சேர்ந்த அணிகள் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்து செல்வார்கள் .அதன்படி இந்திய அணிக்கு குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேரிகோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கௌரவத்தை பெற்றுள்ளன. இந்தத் தொடக்க விழாவில் இந்திய அணி தரப்பில் 6 அதிகாரிகள், உட்பட 22 வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் 18 வகையான விளையாட்டுகளில் 125 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து குத்துச்சண்டை ,மல்யுத்தம் ,பேட்மிட்டண் ஹாக்கி , துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பதற்கான பிரகாசமாக வாய்ப்புகள் உள்ளது. டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.