கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்களான ரவிந்தர் பால் சிங், எம்.கே.கவுசிக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால் சிங் , எம்.கே.கவுசிக் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ரவிந்தர் பால் சிங் தொற்றால் பாதிக்கப்பட்டு , உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் ,வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். அதோடு பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் , விளையாடி சாதனை படைத்துள்ளார் .
இவரைப் போன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஹாக்கி வீரரும் , ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணிக்காக தங்கப்பதக்கத்தை வென்றார். அதோடு அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியார் விருதுகளையும் பெற்றுள்ளார். எனவே முன்னாள் ஹாக்கி வீரர்களின் மறைவிற்கு ,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவரான ஞானேந்திர நிங்கோம்பாம் உள்ளிட்ட பலரும் , தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.