அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளன.
அதாவது சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணித்துள்ளது. மேலும் இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் “அமெரிக்காவுடன் இணைந்து நாங்களும் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக முறையில் புறக்கணிக்கிறோம். ஏற்கனவே சீனாவுடனான உறவில் சில ஆண்டுகளாகவே மோதல் நிலவி வருகிறது. இதனால் இந்த முடிவானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தாது.
அதிலும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து சீனா கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவதற்கான எங்களின் முடிவை மிகவும் தாக்கிப் பேசியது” என்று கூறியுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலியா ஒலிம்பிக் சங்க முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளதாவது “ஒலிம்பிக் போட்டிகளில் எங்கள் வீரர்கள் கலந்துகொள்வார்கள்.
இருப்பினும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு எங்கள் நாட்டைச் சார்ந்த எந்த அதிகாரியையும் அனுப்பி வைக்க இயலாது. அதிலும் சீனாவிற்கு எங்கள் வீரர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று திரும்பி வருவது என்பது சவாலான காரியமாகும். மேலும் எங்கள் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வாங்குவதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டு முடிந்த அளவு ஆதரவை அவர்களுக்கு அளிப்போம்” என்று கூறியுள்ளார். இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து அரசும் எங்கள் நாட்டு அதிகாரிகளை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்று பரவல் மற்றும் அமெரிக்காவின் முடிவை சுட்டிக்காட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா, ஜப்பான் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.