கனமழையின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் “சகீன்” புயல் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி பொதுமக்கள் வீட்டில் இருந்த நிலையில் சகீன் புயல் நேற்று இரவு தெற்கு மற்றும் வடக்கு அல் பத்தினா பகுதியில் கரையை கடந்தது.
இதனால் காற்று வீசியதுடன் ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் தேங்கி காணப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கியது. அது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகள், கடைகள் போன்ற இடங்களிலும் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக சில இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து புயல் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அலைகள் 5 அடிக்கு மேல் ஆர்ப்பரித்தது. அதன்பின் மழையின் காரணமாக மஸ்கட் சர்வதேச விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விமானங்கள் மற்றொரு நாளுக்கு மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சில விமானங்கள் அருகிலுள்ள நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகின்றது.
மஸ்கட்டில் ருசைல் தொழிற்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து அங்கு தங்கியிருந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அமீர்த பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று காணாமல் போன மேலும் 2 பேரையும் தேடி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பார்க்க வேண்டி அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அவசர சேவையில் உதவி செய்ய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக சுல்தான் ஆயுதப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.