குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு உப்பு தொழிற்சாலையில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகம் ஜேசிபி மூலம் உயிரிழந்தோர் உடல்களை வெளியே எடுத்து வருகின்றனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடைய குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.