கொரோனாவால் இந்தியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ஒருவருடைய ஆயுள் காலம் என்பது அவர் ஆணா? பெண்ணா? என்கின்ற பாலினம், வாழ்கின்ற இடம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், சுகாதார வசதிகள் ஆகியவற்றை பொறுத்து கணிக்கப்படுகிறது. இதில் பரம்பரைத் தன்மை என்பதும் அடங்கும். இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 69.5 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 72 ஆகவும் இருந்து வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பின்பு இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் எப்படி உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள மும்பையிலுள்ள மக்கள்தொகை ஆய்வுகளை வைத்து சர்வதேச நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அதில் நாடு முழுவதும் உள்ள இறப்பு முறைகளை ஆய்வு செய்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளியான முடிவுகள் அனைத்தும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.5 வயதிலிருந்து 67 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 72 வயதில் இருந்து 69.8 வயதாகவும் குறைந்துள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.பி.எஸ் உதவி பேராசிரியர் சூரியகாந்த் யாதவ் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 10 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிப்பால் நாம் பல முன்னேற்றத்தை கண்டு வந்தோம். ஆனால் இந்த கொரோனா அதை அனைத்தையும் அழித்து விட்டது. தற்போது மனிதனின் ஆயுள்காலம் 2010ஆம் ஆண்டு இருந்தது போல ஆகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 35 முதல் 79 வயது பிரிவினர் பெருமளவில் இறந்துள்ளதே மனிதர்களின் ஆயுள் வீழ்ச்சிக்கு பெருமளவு பங்களிப்புக்காக உள்ளது.