உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் எழும் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதிலும் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் சிலர் வேலைக்காகவும் மற்றும் மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பிற்காக சென்ற மாணவர்கள் பலர் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்திய தூதரகத்துக்கு மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க அயலக அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை அப்துல்லா அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.மேலும் உக்ரைன் சென்ற தமிழர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கென்று தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.