துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன் சித்தார்த் அடிக்கடி தனது உடையில் சிறுநீர்கழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டிவருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் சிறுவன் தன் ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான கால் சட்டையின் அருகில் தீயை வைப்பது போல் நடித்துள்ளனர். ஆனால் எதிர்பாராத வகையில் கால் சட்டையில் தீபிடித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துவிட்டனர். எனினும் அதற்குள் சிறுவனின் மர்ம உறுப்பில் தீக்காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிக்கனஹள்ளி போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.